ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியாவுக்கு எதிராக சீனா கொண்டு வந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்த பிரேரணையை இலங்கை ஆதரித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன,ஒரு தரப்பை சார்ந்து பயணிக்கும் வெளிநாட்டு கொள்கையை நாம் கையாண்டு வருவது இலங்கைக்கே பாரிய நெருக்கடியை உருவாக்கும் அதேவேளை,பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதுள்ள வெளிநாட்டுக் கொள்கை மிக மோசமானது.இதனை எதிர்க்கட்சியினர் ஆகிய நாங்கள் விமர்சனமாக கூறவில்லை.சர்வதேச நாடுகளை பகைத்துக் கொள்ளும், ஒரு தரப்பை சார்ந்து பயணிக்கும் கொள்கையை நாம் கையாண்டு வருவது இலங்கைக்கே பாரிய நெருக்கடியை உருவாக்கும்.
பொருளாதார ரீதியிலும்,பாதுகாப்பு ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நாம் இந்தியா,சீனா என்ற கொள்கைக்குள் பயணிக்காது சகல நாடுகளையும் சார்ந்ததாக பயணிக்க வேண்டும்.
மனித உரிமைகள் குறித்து சீனா அக்கறை காட்டுவது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அவர்கள் பிரித்தானியா மீது ஏன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலில் எமது நாட்டின் நலன், மக்களின் உரிமைகள், பாதுகாப்பு குறித்து அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். இதில் சர்வதேசம் எத்தளவு ஒத்துழைப்புகளை வழங்குகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் ஏற்றுமதியில் 70 வீதம் பிரித்தானியாவை சார்ந்தே உள்ளது.நாம் அவர்களுடன் முரண்பட்டு இறுதியாக எவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.தவறான பாதையில் பயணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது நாட்டின் பொருளாதாரத்தை பாரிய அளவில் வீழ்த்தப் போகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.