July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தூத்துக்குடியில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தி இந்தியா இலங்கைக்கு கூற வரும் செய்தி என்ன?’

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலை தென்னிந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர். இதனால் இந்தியா இலங்கைக்கு கூறவரும் செய்தி என்னவென கேள்வி எழுந்துள்ளதாகவும்,இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இது குறித்து மௌனம் காப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் தற்போது வரையில் 20 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.அவற்றில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதற்கும் அப்பால் மேலும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.இந்து சமுத்திரம் திறந்த, சகலருக்கும் பயன்பெறக்கூடிய சமுத்திரமாக இருக்க வேண்டும். கப்பல்கள் தடைகள் இன்றி பயணிக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பு ஒரு காரணமாக அமையும். அதேபோல்,சீன கடற்படை ஆசியாவின் ஏனைய நாடுகளின் கரையோரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளது.இது இந்தியாவிற்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.அதேபோல் இந்தியா கடல் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த நினைக்கின்றது.

இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம் என்பதற்காக ஏனைய நாடுகளுடன் அவர்கள் ஒத்துழைத்து போகும் நிலையே உருவாகியுள்ளது.இந்திய -சீனாவுக்கு இடையில் கொள்கை முரண்பாடுகளே இன்றுவரை காணப்படுகின்றது.இந்த நிலையில் இலங்கை எவ்வாறான நிலைப்பாடுகளை கையாளப் போகின்றது என்பதை தீர்மானிக்க வேண்டும்.நாம் பெரிய நாடுகளுக்கு இடையிலான போட்டித் தன்மைக்குள் தலையிடக்கூடாது. நாம் எமது சர்வதேச கொள்கையை சரியாக கையாள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.