July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்; தமிழ் தேசிய கூட்டமைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்துள்ள சிறுமி ஹிஷாலினியின் மரணம் மன வேதனையை அளிக்கின்றதாகவும், இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,இச்செயலை மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் எனவும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கையொப்பமிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உட்பட்டு,கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது.ஈடு செய்ய முடியாத இந்த இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

இந்த செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனையும், இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வியை தொடர முடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம் கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுவதனை வலியுறுத்துகின்றோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொது மக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.