July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் முன்மொழிவு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் சிறுவர்களுக்கான மஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும் 9 சிறுவர் உயர் நீதிமன்றங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு’ குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் சுஜாதா அழகப்பெரும இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் கொழும்பு-பத்தரமுல்லை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன.

எனினும் அந்த நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் வழக்குகளை ஒத்திவைக்கும் போக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

இதுபோன்ற சிக்கல்களை தவிர்த்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவு படுத்த இவ்வாறு 18 நீதிமன்றங்களை அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அத்தோடு, சிறுவர்கள் தொடர்பான காலாவதியான சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளதாகவும்சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார்.