அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றில் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் 86 வீதமானவை அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வரிகளை அதிகரிப்பதன் மூலமும் அரச சொத்துக்களை விற்பது அல்லது கடன்களை எடுப்பதன் மூலமுமே அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த வருடத்தில் நாங்கள் 1216 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருந்தோம். அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்தவும், சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்காக 1052 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம்.
இதில் 161 பில்லியன் ரூபா மட்டுமே திறைசேரியில் எஞ்சுகின்றது. இதன்படி அரச வருமானத்தில் 86 வீதத்தை ஓய்வூதிய கொடுப்பனவுக்காகவே செலவிட வேண்டியுள்ளது” என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கினார்.
சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழுவை அமைத்து கற்பித்தல் சேவையை ஒரு மூடிய சேவையாக மாற்றியதன் பின்னர் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும்.
தற்போதைய தொற்று நோயால் உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போன்ற சிறு பொருளாதாரம் அமைப்பை உடைய அனைத்து நாடுகளுக்கும் இது பொதுவான பிரச்சினை என்றும் அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.
நிதி நெருக்கடி, அந்நிய செலாவணி நெருக்கடி மற்றும் பொருளாதார சரிவு ஆகிய மூன்று பெரிய நெருக்கடிகளை இலங்கை மட்டுமல்லாது உலகின் ஒவ்வொரு நாடும் எதிர்கொண்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.