July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இம்மாத இறுதியில் பிரதமர் மகிந்த யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

நூறு நகரங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரைக்கு அமைய வேலணையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

ஜுலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், நாவற்குழி ரஜமகா விகாரையின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன், மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களிடம் கையளிக்கும் நிகழ்விலும், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காங்கேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதித் திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.

பின்னர், வேலணைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலணையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

பின்னர், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.