இலங்கையின் வட மத்திய மாகாணம் உட்பட பல பகுதிகளில் டினியா எனப்படும் “தோல் நோய்” பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நோய் நிலைமை ஒரு பூஞ்சையினால் ஏற்படுவதாகவும் இது தற்போது நாட்டில் மிக வேகமாக பரவி வருவதாகவும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.
எல்லா வயதினரையும் தாக்கும் இந்த தொற்று நோயால் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கூறினார்.
சுற்றுச் சூழல் மாசுபாடு, மருந்துகளினால் ஏற்படும் ஒவ்வாமை, வைத்திய ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் பல சமூக நடவடிக்கைகள் தொற்றுநோயை ஏற்படுத்த காரணியாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நோய் தொற்றுக்குள்ளானவர் நோயிலிருந்து மீள சுமார் ஆறு மாதங்களுக்கு மருத்துவ ஆலோசனையின் கீழ் சிகிச்சை பெற வேண்டும் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் தொற்று நிலைமை மோசமடையக்கூடும்.
அத்தோடு இந்த நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஸ்டீராய்டு கொண்ட மருந்துகளைப் பயன்படுத்துவதால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று வைத்தியர் ஹேமா வீரகோன் குறிப்பிட்டார்.