
எரிபொருள் விலையேற்றத்தை விடவும் பிரதானமாக பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றதெனவும், பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்ற அதேநேரத்தில், அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தை புனரமைக்க 150 இலட்சம் ரூபாவை செலவழிப்பது இப்போது அவசியமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
எரிபொருள் விலையேற்றம் நாட்டின் சாதாரண மக்களை பாரிய அளவில் பாதித்துள்ளது. கடந்த கால வரலாறுகளை பார்த்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலாபத்தை ஈட்டிக் கொடுத்த பல நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளன. இன்று எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்தமாக அமைச்சர் கம்மன்பில மாத்திரமே காரணம் அல்ல.கடந்த காலங்களில் குறிப்பாக 1978 ஆம் ஆண்டில் இருந்து நாம் கையாண்டுள்ள பொருளாதார கொள்கையே இன்றைய நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த நேரத்தில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் செயற்படவில்லை. அப்போதும் இதே கேள்வி எழுந்த நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட மாட்டாது எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான விலை நிர்ணய சபையை உருவாக்குவதாக கூறினர்.
இதனால் கிடைத்த பணத்தை என்ன செய்தனர்.மக்களுக்கு சலுகைகளை கொடுக்காது கடன்களை செலுத்தியுள்ளதாக கூறுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.