கொவிட் -19 வைரஸ் அச்சுறுத்தல் நிலையில் உதவி செய்ய வேண்டும் என்பது சர்வதேசத்திற்கு தெரிந்துள்ளதெனவும், சீனா,இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு பாரிய அளவில் உதவி செய்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்ட காலங்களில் எம்மை போன்று எரிபொருள் உற்பத்தி செய்யாத நாடுகள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.அதுமட்டுமல்ல,எரிபொருள் விலையேற்ற காலங்களில் மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை செலுத்தும் என்பதை நாம் மறுக்கவில்லை.அதனை வேறு வழிகளில் சமாளிக்க அரசாங்கம் சலுகைகளை வழங்குகின்றது.குறிப்பாக கொவிட் நெருக்கடி நிலையில் பல சலுகைகளை அரசாங்கம் செய்து கொடுத்து வருகின்றது.முடக்க நேரங்களில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றது.கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிகளை நாம் சந்தித்தாலும் கூட மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட் -19 வைரஸ் பரவலில் இருந்து மீளும் எமது முயற்சிகளில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் சீனா எமக்கு பாரிய உதவிகளை செய்து வருகின்றனர்.இந்தியாவும் அதேபோன்று உதவிகளை செய்து வருகின்றனர்.இவர்கள் மட்டுமல்ல,ரஷ்யா,அமெரிக்கா நாடுகளும் எமக்கு முழுமையாக ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
சர்வதேச நாடுகள் எமக்கு நெருக்கடி நிலைமைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.எம்மீதான நம்பிக்கையின் வெளிப்பாடே அவையாகும்.எனவே தேசிய நெருக்கடி நிலையொன்றில் எவ்வாறு செயற்படுவது என்பது கூட தெரியாது செயற்படும் எதிர்க் கட்சியினருக்கு இதனை நாம் கூறிக் கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.