பெரும்பான்மையினத்தின் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக பெருமைப்படும் அரசாங்கம் குறைந்தபட்சம் தன்னை தெரிவு செய்த மக்களையாவது திருப்திப்படுத்தியுள்ளதா என்பதே இன்றுள்ள கேள்வி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்;
பெரும்பான்மையினத்தின் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டதாக பெருமைப்படும் அரசு, குறைந்தபட்சம் தன்னை தெரிவு செய்த மக்களையாவது திருப்திப்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி.அவ்வாறு அவர்களை திருப்திப்படுத்தியிருந்தால்,உங்களை அரச கட்டிலில் ஏற்றுவதற்காக உயிர் கொடுத்து போராடிய ,உங்களுக்கு அரசியல் மறு வாழ்வு கொடுப்பதற்காக தம் மதஸ்தாபனத்தை தந்த அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான் ஆரம்பிக்கும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ், முஸ்லிம் சிறுபான் மையின் மக்களை அழைக்கின்றார் என்றால் இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?
பெரும்பான்மையினத்தின் பெரும்பான்மை வாக்குகளுடன் வந்த இந்த அரசு பெரும்பான்மையினத்தின் பெரும்பான்மையானோரை திருப்திப்படுத்தவில்லை என்பதுதானே இதன் அர்த்தம்.
இலங்கையின் முதலாவது சுதந்திரத்துக்கு போராடிய தலைவர்கள் இனம்,மதம் பார்க்கவில்லை.நாட்டுக்காகவே போராடினார்கள். ஆனால் இன்று எந்த அரசைப் பார்த்தாலும் அது பேரினவாத,நாட்டு நலனை விட தமது குடும்ப நலனை,கட்சி நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கின்றன.அபிவிருத்தி திட்டங்கள் கூட கட்சி நலனையும் அரசியல் நலனையும் தரகுப் பணத்தையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன.
கொரோனா நெருக்கடியில் வேறு நாடுகளின் அணுகு முறைகளும் எமது நாட்டின் அணுகு முறைகளும் வித்தியாசமாகவே உள்ளன. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் எந்த வித தொடர்பும் இல்லையோ அதேபோல், கொவிட் செயலணிக்கும் இராணுவத் தளபதிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.தீர்மானம் எடுக்க வேண்டியது அமைச்சரவை.செயற்படுத்த வேண்டியது அதிகாரிகள்.
அரசில் தொற்று நோய்கள் தொடர்பான சிறப்பு நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண,துறைசார் மருத்துவரான சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே உள்ளார். இவர்களது ஆலோசனைகள் பெறப்பட்டதாக நாம் அறியவில்லை.கொரோனா தடுப்பில் இராணுவத்தை பயன்படுத்துவதை நான் தவறாக கூறவில்லை.துறைசார் நிபுணர்களை இராணுவம் வழி நடத்துவதையே நான் தவறாக கூறுகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்