இலங்கைக்கு இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 800 தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளதாக மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதில் 68 இலட்சத்து 8,700 கொரோனா தடுப்பூசி டோஸ்களை தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை நாட்டுக்கு நன்கொடையாக கிடைக்கப் பெறப்பட்ட தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை 33 இலட்சத்து 64,100 எனவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இதில் 71 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு 1.5 மில்லியன் “மெடோர்னா” தடுப்பூசிகளும், 64,000 “கோவ்ஷீல்ட்” தடுப்பூசிகளும், 180,000 “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசிகள் மற்றும் 1 இலட்சத்து 28,700 “பைசர்” தடுப்பூசிகளும் இதில் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்படி, நாட்டில் 57 இலட்சத்து 68,494 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் 13 இலட்சத்து 13,071 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சீன தயாரிப்பான “சினோபார்ம்” தடுப்பூசியை பெற்ற மக்களின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கின்றமை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“டெல்டா” வைரஸுக்கு எதிராக “சினோபார்ம்” தடுப்பூசி செயற்திறன் கொண்டது என அறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகின் பல நாடுகளும் “சினோபார்ம்” தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாகவும் மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.