உலக முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கும் ஹஜ் கடமை மகத்தான பங்களிப்பு செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட் காலத்தில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
“முஸ்லிம்களின் வாழ்வை நிர்மாணிக்கும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமையாகும்.
பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்ட இஸ்லாமியர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.
இதன் ஊடாக இஸ்லாமியர்கள் மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைந்து, இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக பிரார்த்திக்கின்றனர்.
அந்தவகையில் சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது” என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி, உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுப்பட வேண்டும் என ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.