July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய 300 இற்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில வாரங்களுக்கு பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவலையை வெளியிட்டுள்ள பொலிஸ் திணைக்களம், சுகாதார நிபுணர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் எவரும் வைரஸின் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான வடிவத்தையும் இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது என சுகாதார அதிகாரிகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸார் அந்தந்த மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில் 30 வயதிற்கு மேற்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸினால் ஏற்படும் அழிவைத் தடுக்க தடுப்பூசிகள் அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதை தடுப்பூசிகள் தடுக்காது என்றாலும், முழுமையான தடுப்பூசி செலுத்துகையானது தொற்றாளர்களுக்கு வைரஸின் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுடன், இறப்புக்களை தடுக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.