லாப்ஃஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட இடமிளக்கப் போவதில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயுவிற்கான கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு எம்மிடம் எரிவாயு கையிருப்பில் உள்ளது. சந்தையில் காணப்படும் எந்தவொரு நிறத்தினாலான வெற்று சமையல் எரிவாயு கொள்கலனுக்கும், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை எம்மால் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலதிகமான எரிவாயு கொள்கலன் தேவைகள் அதிகரித்தால் அதனை நிவர்த்திப்பதற்கான இயலுமை தமது நிறுவனத்துக்கு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாதென சுட்டிக்காட்டியுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர், சமையல் எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் உள்நாட்டு எரிவாயு தேவையில் 20 வீதத்தை லாப்ஃஸ் நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், அதன் இறக்குமதி நிறுத்தப்பட்டால் லிட்ரோ நிறுவனம் அந்த தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளார்.