January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கற்பிட்டியில் உள்ள தீவுகளில் நீருக்கு மேலான சுற்றுலா மேடை விடுதிகளை அமைக்க நடவடிக்கை

file photo: pixabay.com/Maldives

கற்பிட்டியில் உள்ள 12 தீவுகளில் நீருக்கு மேலான சுற்றுலா மேடை வீடுகள் மற்றும் விடுதிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீருக்கு மேலான சுற்றுலா மேடை வீடுகள் மற்றும் விடுதிகளை அமைக்கும் திட்டம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உலகளாவிய சுற்றுலாத்துறையில் உயர்ரக சர்வதேச சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு சில நாடுகள் நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகள் எனும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளன.

கற்பிட்டி மற்றும் ஏனைய கடலோரப் பிரதேசங்களில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் நீருக்கு மேலான சுற்றுலா விடுதிகளைப் பயன்படுத்த முடியுமென தெரியவந்ததை அடுத்தே, சுற்றுலாத்துறை அமைச்சு இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

தீவுச் சுற்றுலா விடுதிகள் எண்ணக்கருவை மேம்படுத்துவதற்காக கற்பிட்டி பிரதேசத்தில அமைந்துள்ள 12 தீவுகள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முன்னெடுக்க வரையறுக்கப்பட்ட சன் ரிசோட் இன்வெஷ்ட்மென்ட் லங்கா (தனியார்) கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, நீருக்கு மேலான 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.