2022 ஜனவரி முதல் பொலித்தின் பைகள் மீதான தடையின் முதல் கட்ட நடவடிக்கைகளை தொடங்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக சுற்றாடல் அமைச்சு அமுல்படுத்தியுள்ள திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொலித்தின் பைகளின் பயன்பாடு ஆண்டுக்கு 2 பில்லியனை தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுப்பர் மார்க்கட் கடை தொகுதி ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பொலித்தின் பைகள் தேவைப்படுவதாகவும் நாட்டில் உள்ள ஏனைய அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் தேவைப்படும் பொலித்தின் பைகளின் எண்ணிக்கை 2 பில்லியனுக்கும் அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒற்றை பயன்பாட்டுடைய பொலித்தின் பைகளின் தடை இரண்டு கட்டங்களாக அமுல்படுத்தப்படும் எனவும் அதன் முதல் கட்டம் 2022 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
இந்த பைகளுக்கு மாற்றீடாக புதிய பைகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. எனினும் மாற்று வழிகள் செயல்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் பொலித்தீன் தடை அமுல்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.