July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஆகஸ்ட் முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறக்க நடவடிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சுகாதார நடைமுறைகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதன்படி நாடு முழுமையாக திறக்கப்பட்டதும், ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 வரை சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்ததாக அந்த அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாட்டை மீண்டும் திறப்பது குறித்தும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோரின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்கான ஒரே வழி, நாட்டை திறந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையின் மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாட சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.