January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை’

கொரோனாவின் நான்காவது அலையை இலங்கை நெருங்கி வருவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பில் எமக்கு கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் கொரோனா நான்காவது அலையின் முதல் பகுதியை நாம் அண்மித்து வருகிறோம் என்பது இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற அடிப்படையில் நாம் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலத்தை போன்றே இக்காலப்பகுதியிலும் தேசிய மருத்துவமனைக்கு அதிகமான கொரோனா நோயாளர்கள் வருகை தருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 200 நோயாளர்கள் வருகை தருகின்றனர். அவர்களில் 100 பேருக்கு ஒக்ஸிஜன் தேவை காணப்படுகிறது. கொழும்பு நகர சபைக்குள் 100 க்கு 30 சதவீதமான டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர்.

டெல்டா தொற்றுக்குள்ளானவர்களின் எச்சிலில் இந்த வைரஸ் செறிவு அதிகமாக இருக்கும். இந்த டெல்டா திரிபு மிக வேகமாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு மாதத்திற்குள்  நாடு முழுவதும் பரவலாம். இது நிச்சயம் தெரிந்த ஒரு விடயம் என அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கணிசமான அளவு இனங்காணப்படுகின்றனர்.

பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.