July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளை புதிய பொலிஸ் குழுவுக்கு கையளிக்கவும்’: மனோ கணேசன்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மரணித்த மலையக சிறுமி தொடர்பான விசாரணைகளை புதிய பொலிஸ் குழுவொன்றுக்கு கையளிக்கும்படி தமிழ் முற்போக்கு கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், வேலு குமார் எம்.பி மற்றும் உதய குமார் எம்.பி. ஆகியோர் சந்தித்து, வலியுறுத்தியுள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எவ்வித அழுத்தங்களும் இன்றி நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில் இருந்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றும்படியும், அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைதன்மை இருப்பதாக தெரியவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை ஒன்று பெறப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சனை ஆகும்.

இஷாலினியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் மேலதிக விபரங்களை புதிய பொலிஸ் குழு கண்டுபிடித்து, நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

நெருப்புக்காக பயன்படுத்தப்பட்ட லைட்டர் எவருடையது? மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறும் பொரளை பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய, தற்கொலை செய்து கொள்பவர் இயல்பாக தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ளாமல், ஏன் காலில் ஊற்றிக்கொண்டார் என்பதற்கு தரும் விளக்கம் என்ன?”

என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் விளக்கம் கோரியுள்ளது.

சிறுமியின் மரணம், தற்கொலை என பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எப்படி முடிவுக்கு வந்தார் என்று மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறுமியின் விடயத்தில் குற்றம் நிகழ்ந்திருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி கேட்டக்கொண்டுள்ளது.

This slideshow requires JavaScript.