எரிபொருள் விலை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது.
நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த விவாதம் ஆரம்பமானதுடன், இரண்டாவது நாளாக இன்றும் அந்த விவாதம் தொடரவுள்ளது.
விவாதம் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளன.
எனினும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் இது தொடர்பாக இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.