குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கையளிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை சபா பீடத்தில் சமர்ப்பித்தார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்.
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனையும் சமர்ப்பித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு பல்வேறுபட்ட காலங்களில் நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.இப்பொழுது கூட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ளனர். 2021 07.01 ஆம் திகதியன்று குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பு தன்னுடைய கடிதம் மூலமாக பாராளுமனற உறுப்பினர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 அரசியல் கைதிகளை விடுவியுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் 70 வயதை தாண்டியவர்கள் கூட இருக்கின்றனர்.இவர்கள் சிறைகளில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கையளிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை நான் இந்த சபா பீடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.அதனை ஹன்ஸாட்டில் பதிவிடுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.