January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களால் விரைவில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்படும்; வினோநோகராதலிங்கம் எம்.பி தெரிவிப்பு

கொடூர பயங்கரவாத தடை சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து 42 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.இன்றைய நாள் தமிழ் மக்களுக்கு கறுப்பு நாள் எனக் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதேபோன்று இந்த நாட்டு மக்களால் விரைவில் தற்போதைய அரசு காணாமல் ஆக்கப்படும் என்றும் கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக நாம் தொடர்ந்தும் போராடுகின்றோம்.ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் உட்பட சர்வதேச நாடுகள் கூட இப்போது இந்த பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. இந்த சட்டத்தை நீக்குமாறு கோருகின்றன.இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றன.இவ்வாறான நிலையில் தான் அந்த கொடிய சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக எத்தனை ஆயிரம் இளைஞர்கள் அழிக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டனர்.காணாமல் ஆக்கப்பட்டனர்.தமிழ் பேசும் சிறுபான்மையினம் அடக்கி ஒடுக்கப்பட்டது.இந்தக் கொடிய வரலாற்றை கடந்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசு சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக திருத்தம் என்ற முயற்சியை செய்து கொண்டிருக்கின்றது.

எமது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியல் தீர்வை கொண்டு வருவதாக சொன்ன அரசும் சரி, புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக சொன்ன அரசும் சரி தொடர்ந்தும் இந்த விடயங்களில் கால நீடிப்பைக் கேட்டுக் கேட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்கின்ற அரசாகவே இருக்கின்றது.அதேபோன்றே இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதாக இப்போது கூறி சர்வதேசத்தை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.இதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்,யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதேபோன்று விரைவில் இந்த நாட்டு மக்களினால் இந்த அரசும் காணாமல் ஆக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.