பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடன் நெருக்கடி காரணமாக அடுத்த சில மாதங்களில் மின்சார சபையும் நெருக்கடிக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச கடன் நெருக்கடி,எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத சிக்கல் மற்றும் பெற்றோலிய திணைக்கள நட்டம் என்பவற்றை ஒரே நேரத்தில் அரசாங்கம் சந்தித்துள்ள காரணத்தினால் மீளமுடியாத சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இயற்கை திரவ எரிவாயு மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்,அரசாங்கம் எந்தவித சட்ட நடவடிக்கைகளும், கேள்வி மனுக் கோரலும் இல்லாது அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனத்திற்கு எமது வளங்களை வழங்கி எரிபொருள் உற்பத்தி செய்வதால் எமக்கு எந்த இலாபமும் கிடைக்கப் போவதில்லை.அதேபோல் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களையும் அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுக்கும் தீர்மானம் எடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள் முரண்பட்டவை.ஆகவே கொள்கையில்லாது வெளிநாடுகளுக்கு எமது வளங்களை விற்பதால் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும்.சகல பிரச்சினைகளும் இன்று ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது.அதனை அரசாங்கம் சமாளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.