அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலமாக அரசாங்கத்திற்குள் ஏற்படும் பிளவை தடுக்கவும், அரசாங்கத்தை காப்பாற்றவும் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது.
ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வலியுறுத்த இதுவே காரணம் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக கனவு காணும் பசில் ராஜபக்ஷவின் முயற்சியை தோற்கடிக்க அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள மாற்று அணியினை தோற்கடிக்கவே இந்த சூழ்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ள காரணத்தினால், அடுத்த ஒருவரை உருவாக்க வேண்டும். அதற்காகவே பசில் அணியினர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறுமனே அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதற்கு அரசாங்கத்தில் இருக்கும் சிலர் ஆதரவு வழங்குவார்கள் என்பதை தெரிந்தே அரசாங்கத்தை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.
ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அரசாங்கம் ஒன்றிணையும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.