“கடன்களையும் வட்டியையும் செலுத்துவதற்கு பிரதமர் வீட்டில் இருந்து பணம் கொண்டுவர முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடன்கள், தேசிய கடன்கள் அதற்கான வட்டிகளை செலுத்த பல பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களின் பக்கம் தீர்மானம் எடுக்க முடியாது. இந்த கடன்களுக்கான பணத்தையும் மக்களிடம் இருந்தே அறவிட வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வரிகளின் மூலமாக 1216 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது. ஆனால் அதே ஆண்டில் அரச துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவாக 1015 பில்லியன் ரூபா கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக அரச கடன்களை செலுத்த முடியாது, கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நெருக்கடி நிலையிலேயே 2020 ஆம் ஆண்டில் இருந்து எதிர்கொண்டு வருகின்றோம்.
நாட்டை மீட்டெடுக்க சில நெருக்கடியான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும், மக்களுக்கு சலுகைகளை கொடுப்பதில் பல வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுக்கின்றோம். அதேபோல் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்தும் அரசாங்கம் ஒன்றிணைந்தே தீர்மானித்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.