யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவர் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்கள் இல்லாததால் வழக்கைத் தொடர முடியவில்லை என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை அடுத்தே, இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்பையில் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுள் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
இதேவேளை, இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் யாழ். மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் ஐவரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
ஐவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரிவின் கீழ் ‘பி’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கைத் தொடர முடியவில்லை என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனால் சந்தேகநபர்கள் ஐவரையும் வழக்கிலிருந்து விடுவித்து, விடுதலை செய்ய யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.