பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவது மற்றும் தடுத்து வைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ் உரையாற்றும் போதே, அவர் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுத்து வைப்பு தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் கைதுக்கான காரணங்கள் எதுவும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவதும் தடுத்து வைப்பதும் பாராளுமன்ற உரிமைகளை மீறுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து, அவரையும் கைது செய்ய முயற்சிப்பதாக ரணில் குற்றம்சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தாமல் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.