July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் “டெல்டா” வைரஸ் தொற்றாளர்களின் வீதம் உயர்வு!

தற்போது கொழும்பு மாவட்டத்தில் பதிவாகி வரும் கொவிட் தொற்றாளர்களில் 20 முதல் 30 வீதமானவர்கள் “டெல்டா” வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வைரஸ் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இது தெரியவந்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பி.சி.ஆர் நேர்மறையான அனைத்து நோயாளிகளின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. உதாரணமாக 10 பேரின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தும் போது குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேருக்கு “டெல்டா” தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் “டெல்டா” வைரஸ் தொற்று 20 முதல் 30 சதவிகிதம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டின் வட பகுதியில் “டெல்டா” வைரஸ் நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் இலங்கையின் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளுக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு, காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் திரிபடைந்த “டெல்டா” வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.