பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை, எபனேசர் மாவத்தையிலுள்ள மாடிக் குடியிருப்பொன்றில் மறைந்திருந்த போது அவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக பதவி வகித்த ரிஷாட் பதியுதீன், 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருக்கும் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை அடிப்படையாகக் கொண்டு அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் கடந்த 13 ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கமைய கடந்த 6 நாட்களாக ரிஷாட் பதியுதீனை தேடிவந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.