July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸிலுக்காக பதவி துறந்த ஜயந்த கெட்டகொட உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்தார்

பஸில் ராஜபக்‌ஷவுக்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுத்த ஜயந்த கெட்டகொட அதற்குப் மாறாக வழங்கப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி மற்றும் மேலும் பல பதவிகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஸில் ராஜபக்‌ஷ தந்த போதிலும் அதில் எதையும் தாம் ஏற்றுக் கொள்ளவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பஸிலை ஆதரித்து தான் தொடர்ந்தும் அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக ஜயந்த கெட்டகொட விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பதற்காகவே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ள அவர், அதற்கு மாறாக எதையும் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தொடர்ந்தும் பஸில் ராஜபக்‌ஷவின் சேவைக்கு தாம் துணையாக இருக்க போவதாகவும் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரெர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதற்காக ஆளும் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.

இதனையடுத்து பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று, பின்னர் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பஸில் ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு கொடுத்தமைக்காக ஜயந்த கெட்டகொடவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி வழங்கப்படுவதாக அரசாங்கம் தரப்பில் செய்தி வெளியாகி இருந்தது.

எனினும், அதனை விட வேறு சில வாய்ப்புகளும் தமக்கு வழங்கப்பட்டாலும், அவற்றை தாம் நிராகரித்து விட்டதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.