
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான விசேட பாராளுமன்ற குழுவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட 21 அரசியல் கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக, பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் 155 முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான விசேட பாராளுமன்ற குழுவுக்கு,முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் ஜூலை 15ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி,தேசிய சுதந்திர முன்னணி, மௌபிம ஜனதா கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (உடுநுவர கிளை), ஜனநாயக இடதுசாரி முன்னணி, லிபரல் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் மகாசபை, ஐக்கிய சமாதான முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் சமூக ஜனநாயக கட்சி, ஜனநாயக கூட்டணி, சிங்களதீப ஜாதிக பெரமுன, இலங்கை சமசமாஜக் கட்சி, சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள், குறித்த விசேட பாராளுமன்றக் குழுவின் எதிர்கால கூட்டங்களில் ஆராயப்படவுள்ளன.
அதேநேரம், கடந்த 14 ஆம் திகதி விசேட குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்த இந்நாட்டின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ஃரல் அமைப்பு தமது யோசனைகளை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
விசேட குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.