July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பொறுப்புக்கூறல்,மனித உரிமை தீர்மானங்கள் இறுதியாக தமிழ் மக்களின் அரசியல் தீர்விலேயே முடிய வேண்டும்’

யுத்த முடிவின் பின்னர் கடந்த பத்து வருடங்களாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் இன்னமும் இறுதி தீர்வு கிடைக்கவில்லை.வெறுமனே பொறுப்புக்கூறல், மனித உரிமை விடயங்களை கையாளுவதுடன் தீர்மானங்கள் நின்றுவிடாது. இறுதியாக தமிழ் மக்களின் அரசியல் தீர்விலேயே இவை முடியவேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிமா தீர்மானத்தை தொடக்கி வைத்தவர்கள் அமெரிக்கா என்ற காரணத்தினால் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் அமெரிக்காவிற்கு முக்கிய பொறுப்பு இருக்க வேண்டும்.கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களின் போது பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இடைநடுவே அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியிருந்தாலும் கூட தற்போது மீண்டும் அவர்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் வரவுள்ளனர். இது மிகப் பெரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது விவகாரங்களை கையில் எடுத்துள்ளனர்.ஆனால் அமெரிக்கா மீண்டும் மனித உரிமைகள் பேரவைக்குள் வருவது மிக முக்கியமான அதேவேளை, தீர்வுகளை விரைவுபடுத்தும் செயற்பாடுகளாக அமையும்.எனவே இம்முறை இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் எடுத்துக் கூறினோம். பிரித்தானிய தூதுவருடனான சந்திப்பிலும் இந்த விடயங்களை நாம் தெரிவித்திருந்தோம்.

குறிப்பாக இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவா பிரேரணையில் சாட்சியங்களை சேகரித்தல்,உண்மைகளை கண்டறியும் பொறிமுறையின் போது அதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்வது போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படும்.அதற்கான ஒத்துழைப்புகளை அமெரிக்கா முன்னெடுக்கும் என கூறியுள்ளனர்.

கடந்த பத்து வருடங்களாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற போதிலும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.ஆகவே வெறுமனே பொறுப்புக்கூறல்,மனித உரிமை விடயங்களை கையாளுவதுடன் நின்றுவிடாது இறுதியாக இவை அரசியல் தீர்வில் வந்து முடியவேண்டும்.

அதனையே நாம் எதிர்பார்க்கின்றோம்.இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட,காணாமலாக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும். அதேபோல், அரசியல் தீர்வே எமது பிரதான இலக்காக உள்ளது.சகல நகர்வுகளும் இறுதியா எமது மக்களுக்காக நிரந்தர தீர்வு ஒன்றில் முடிய வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அமெரிக்க தூதுவரிடமும் இதனை நாம் கூறினோம்.

எனவே செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூடுகின்றது.இதன்போது இலங்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் வேளையில், அமெரிக்கா வலுவான நிலைப்பாடொன்றை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.அதேபோல் அரசியல் அமைப்பு ரீதியிலான தீர்வுகளுக்கு நாம் முன்நகர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.