12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என்றார்.
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பிலும், 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களிடம் போதுமான பணம் உள்ளது என்றார்.
அத்தோடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பைசர் மற்றும் ‘மொடர்னா’ தடுப்பூசிகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.