July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பலத்த காற்றுடனான காலநிலை நிலவும்!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.