July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு முன்னரை விடவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படும்; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளிலும் “டெல்டா” கொவிட் மாறுபாடு பதிவாகி வரும் நிலையில், பயண கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமற்றது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“டெல்டா” வகை நாட்டில் முதன்மை வைரஸ் தொற்றாக உருவெடுப்பதுடன், நாடு முன்னர் எதிர்கொண்டதை விடவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என அதன் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலையில், தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ள பல நாடுகளும் “டெல்டா” வைரஸ் பரவலை தடுக்க பயண கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலை புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலை அல்ல எனவும் மிகவும் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதையும், பொதுமக்கள் அனைத்தையும் மறந்து வருவதையும் காண்கிறோம்”.

“இந்த சூழ்நிலையை அரசாங்கமும் மக்களும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பேரழிவு சூழ்நிலையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாட்டில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் ” என்றார்.