July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; திங்கட்கிழமை பாராளுமன்றில் விவாதம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன் பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (19) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

ஆளுந் தரப்புக்குள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிலர் செயற்பட்டாலும் அமைச்சர் கம்மன்பிலவை காப்பாற்றுவதாக ஆளுங் கட்சி பாராளுமன்றக் குழுவில் தீர்மானம் எடுத்துள்ளனராம். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து நாட்டில் எழுந்த எதிர்ப்பின் பின்னர் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்தனர். எதிர்கட்சியின் 43 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பிரேரணை ஒன்றினை கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல கையளித்திருந்தார்.

அதன் பின்னர் இரண்டு கட்சி தலைவர்கள் கூட்டங்களில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்ட பின்னர் இறுதியாக கடந்த 5 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய நாளை 19 ஆம் திகதி, 20 ஆம் திகதிகளில் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணங்கியிருந்தனர்.

அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் அரசாங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த நிலையில்,எதிர்க் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்ததுடன், அரசாங்கத்தில் குழப்ப நிலையொன்றும் உருவாகியிருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தொடர்ச்சியாக அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக செயற்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஆளுந் தரப்புக்குள் பொதுவான நிலைப்பாடொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இறுதியாக பாராளுமன்றத்தில் அரசாங்கமாக இதனை நாம் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆகவே அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்து எதிர்க்கட்சியை பலவீனப்படுத்துவதே ஆளுந்தரப்பு பாராளுமன்றக் குழுவின் தீர்மானம் என்று அவர் தெரிவித்திருந்தார்.