இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் 1129 கிலோ மீட்டர் (610 கடல் மைல்) தொலைவில் ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஜூன் 29 அன்று காலியிலிருந்து 6 மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற படகில் ஒரு மீனவருக்கு அடிவயிற்றில் வெட்டுக் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
நேற்று (17) காலை 7 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், ஆபத்தில் இருந்த மீனவர் தொடர்பில் ஏனைய மீனவர்கள், மீன்வள மற்றும் நீர்வளத் துறைக்கு அறிவித்து உதவி கோரியுள்ளனர்.
இதையடுத்து மீன்வள மற்றும் நீர்வளத் துறையினர் கடற்படைக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்கள் உடனடியாக செயற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை இன்று (18) மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் கடற்படையினரால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் கடல் பரப்பில் அனர்த்தங்களுக்கு உள்ளாகும் மீனவர்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து தயாராக இருக்கும் என படையினர் தெரிவித்துள்ளனர்.