January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்’; சாணக்கியன் எம்.பி

சிறுவர்களை பணிக்கமர்த்தும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,

சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ‘குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று, சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங் கொடுக்கின்றனர்.

எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். சிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.

அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என தனது ஊடக அறிக்கையில் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.