July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரிஷாத் பதியூதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்”

ரிஷாத் பதியூதீன் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என வீட்டுப் பணிப் பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ‘ட்ரொடெக்ட் ‘அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த சிறுமியின் மரணத்திற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த டயகம பகுதி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரிய வரவில்லை.

தரகர் ஒருவர் ஊடாகவே குறித்த சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்? இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

எனவே, சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடி மறைக்கப்படக் கூடாது.

அதற்காக வீட்டுப் பணி பெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மலையக பகுதியில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம். இதனால் பெண்கள் இன்று கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதுடன், அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறவில்லை.

ஆனால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்’ எனவும் கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.