July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா தொற்று சந்தேகம்!

(File photo ; Facebook /National Zoological Gardens of Sri Lanka)

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மேலும் நான்கு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்களுக்கே இவ்வாறு கொவிட் வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆராயும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் விலங்குகளிடையே முதல் முறையாக, தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் 14 வயதான “தோர்” எனும் சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அது குணமடைந்தது.

இதை தொடர்ந்து 12 வயதான ‘ஷீனா’ எனப்படும் சிங்கமும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்திருந்தது.

அதனிடையே, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய 25% மானவர்களுக்கு ஒரே நேரத்தில் மிருக காட்சி சாலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.