இணையம் மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க முக்கியஸ்தர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பியதை தொடர்ந்து ஆசிரியர்களினால் தொழிற்சங்க போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 12 ஆம் திகதி முதல் இணையம் மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதற்கு ஆசிரியர்கள் தீர்மானித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும், ஆசியர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என்பதுடன், எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளிட்ட அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு அழைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.