12 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்தியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றக் கும்பலை சேர்ந்த ‘கிம்புலா எல குணா’ என்பரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்தத் தகவலுக்கமைய ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது 12 கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாகவும், இந்த போதைப் பொருள் கிம்புலா எல குணாவுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.