January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப் பார்க்க வேண்டியுள்ளது’; சிறீதரன் எம்.பி.

இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப் பார்க்க வேண்டியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடலட்டை பண்ணை உருவாக்குவது தொடர்பில் மஹிந்த அமரவீர கடற்றொழில் அமைச்சராக இருந்த போது, 2017 மார்ச் 8 ம் திகதி அரச வர்த்தமானியில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதிலே கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களையும் விட அதிகமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக 11 இடங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடலட்டை பண்ணைக்கு பொருத்தமான இடங்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலட்டை குஞ்சுகளை உருவாக்குவதற்காக அரியாலையில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இரண்டு பரப்பு காணிக்குள் கடலட்டை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய யாழ். மாவட்டத்தில் அனுமதி பெற்றவர்கள் அதனை தாண்டி கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெளதாரிமுனைக்கு வந்து இரண்டு ஏக்கரை வலுக்கட்டாயமாக பிடித்து அப்பகுதி மீனவ சங்கங்களின் அனுமதி, பிரதேச செயலக அனுமதி இல்லாமல்இன்னொரு நாட்டை சேர்ந்த நிறுவனம் இடத்தை பிடிக்கும் என்றால், அதற்கெதிராக முறைப்பாடு செய்து அறிவித்தும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்கள் என்றால் இந்த நாட்டினுடைய சட்டம் இந்த நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.