July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பூசிகளை தெரிவு செய்யாமல் ஏற்றிக் கொள்ளுங்கள்’; பேராசிரியர் சன்ன ஜெயசுமன

கொரோனா தடுப்பூசிகளை தெரிவு செய்யாமல் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்கு முறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை மறுதினம் (19)  60,000 டோஸ் “பைசர் ” தடுப்பூசிகளும் அடுத்த வாரம் அளவில் 2 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளும் நாட்டுக்கு கிடைக்கப் பெற உள்ளதாக பேராசிரியர் சன்ன ஜெயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 86 வீதமானவர்களுக்கு “டெல்டா” வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

இருப்பினும், இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 9.8  வீதமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுவதாக குறித்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் ஏற்றிக் கொண்டவர்களில் புதிய வைரஸ் தொற்று காரணமாக 0.4 வீதமானவர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தடுப்பூசிக்கு பின்னரான விளைவுகள் தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வினை இந்தியாவில் தேசிய அளவில் நடத்தியுள்ளது.

இதன்படி, தடுப்பூசி ஏற்றிக் கொள்வது நோயின் தீவிரம், மருத்துவமனையில் சிகிச்சைக்கான அவசியம் மற்றும் இறப்பு ஆகியவற்றை குறைப்பதாக ஆய்வில் தெளிவாக அறியப்பட்டுள்ளது.

எனவே, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதுடன், பொது மக்கள் தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.