July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மின்சார வாகன இறக்குமதிக்கு வரவு-செலவு திட்டத்தில் நிவாரணம்’: சுற்றாடல் அமைச்சர்

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த வரவு-செலவு திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு மூலோபாய திட்டத்தை வகுக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த காலங்களில் இதே போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், மின்சார வாகனங்களுக்கு தேவையான மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக இந்த திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன என அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளில் 60 சதவீத காற்று மாசுபாடு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைகளினால் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவின் படி 2020 ஆம் ஆண்டு இறுதியில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியனை கடந்துள்ளது.

பழைய வாகனங்கள் முறையாக பராமரிக்காத காரணத்தினால் அவற்றிலிருந்து வெளியேறும் வாயுக்கள் வளி மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனை தடுக்கும் நோக்கில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை சுற்றாடல் அமைச்சு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.