
வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துநருக்கு 14 நாட்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த புங்குடுதீவு இளம் பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் ‘தமிழ் அவனி’ செய்திப் பிரிவிடம் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய புங்குடுதீவு பெண் இம்மாதம் 3ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு வந்த பஸ்ஸில் பயணித்திருந்தார்.
இதையடுத்து குறித்த பஸ்ஸின் சாரதி, நடத்துநர் மற்றும் அதில் பயணித்தவர்கள் தத்தமது வீடுகளில் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.அதற்கமைய நடத்துநருக்கு இரண்டு தடவைகள் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் பிரகாரம் அவருடைய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி, துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த நபரே தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பஸ்ஸில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் நடத்துநர் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த நடத்துநர் கொழும்பில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் WP ND 9776 என்ற இலக்கமுடைய இ.போ.ச. பஸ்ஸில் பணியாற்றி வந்திருந்தார் என்று ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.