January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விலைவாசி உயர்வை கண்டித்தும், எரிபொருட்களின் விலையேற்றம், மற்றும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வது உட்பட பல்வேறு விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கோட்டாபய,மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியான விலை அதிகரிப்பானது நாட்டு மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டி வதைப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மக்களின் நலனை முன்னிறுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது சுமைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திய நிலையில், மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”போராடும் மக்கள் மீது பொலிஸாரை ஏவாதே, இலவச கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தேசிய கலை இலக்கிய பேரவையினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு உட்பட பொது அமைப்புக்கள், பொது மக்கள் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.