July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொத்தலாவல பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும்’

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழகச் சட்டம் பற்றி பௌத்த மஹா சங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, எதிர்கால தலைமுறைக்குச் செய்யும் பாரிய அநீதியாகும் என்று ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.

“கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் 40 வருட காலமாக நாட்டுக்குத் தேவையான பெரும் எண்ணிக்கையான கல்விமான்களை உருவாக்கியுள்ளதாகவும் உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளுடன் சித்தியடைகின்ற மாணவர்கள்கூட இப்பல்கலைக்கழகத்தை தெரிவு செய்ய ஆர்வம்காட்டி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உயர் கல்விக்காக தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம், நாடும் பெற்றோர்களும் இழக்க வேண்டி ஏற்படும் பாரிய தொகையைச் சேமிக்க வேண்டுமானால், உயர்ந்த தரம் வாய்ந்த இத்தகைய பல்கலைக்கழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் ஒழிப்புக்காக ஆரம்பம் முதல் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித் திட்டங்களை மஹா சங்கத்தினர் பாராட்டியுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள் குறித்து மக்களுக்கு அறிவூட்டி, சமூகத்தில் பரவி வரும் பிழையான தகவல்களை நீக்குமாறு பௌத்த தேரர்கள் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.