February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புபட்ட 70 பேர் தலைமறைவு

பருத்தித்துறை நகர வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைமறைவாகியுள்ளவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றடன் அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.

பருத்தித்துறை நகர வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 7 வர்த்தகர்களுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகளை அடுத்து தொற்றாளர்களை சிகிச்சை முகாமுக்கு அனுப்பும் பணியை சுகாதாரத் துறையினர் ஆரம்பித்த போதே, இவ்வாறு 6 வர்த்தகர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகளை வழங்கிய பின்னர் தமது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த 6 வர்த்தகர்களின் கீழ் பணியாற்றிய 70 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியுள்ளதாகவும், அவர்களும் தலைமறைவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைமறைவாகியுள்ள 70 பேரையும் கண்டறிய சுகாதாரத் துறையினர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.