
அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்ல மாட்டோம் என்று வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லத் தயாராகுவதாக வெளியாகும் செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பினருடனும் ஒழுங்கான வேலைத் திட்டங்களின் கீழ் பயணிக்க தாம் தயாராக இருப்பதாகவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரவ இயற்கை எரிவாயு திட்டங்கள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படுவதே தவிர அமெரிக்காவுக்கு வழங்குவதல்ல என்று வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே அரசாங்கம் சில வெளிநாட்டு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைட்டம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நீங்கள் கொதலாவல பல்கலைக்கழக சட்ட திருத்தத்தை ஏன் எதிர்ப்பதில்லை என்று ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
“கொதலாவல என்பது தனியார் பல்கலைக்கழகமொன்று அல்ல. அது அரச பல்கலைக்கழகம். அது பல்வேறு சட்டங்களின் கீழ் இயங்கி வந்தது.
அவ்வாறான சட்ட ஒழுங்குகளை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியே நடைபெறுகிறது.
இதனைடையே, சட்டமூலம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. பொருத்தமான திருத்தங்களுடன் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம்” என்று அமைச்சர் விமல் வீரவன்ச விளக்கமளித்துள்ளார்.